டிவில தலைய காட்டுறிங்களா? விஜய் போட்ட முக்கிய கண்டிசன்!
Author: Hariharasudhan13 November 2024, 4:44 pm
தொலைக்காட்சி விவாதங்களில் கட்சி சார்பில் பங்கேற்போர் கட்சிக் கொள்கையை முழுமையாக உள்வாங்கி கண்ணியத்துடன் பேச வேண்டும் என விஜய் கூறியதாக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை: நடிகர் விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்தே, அவரைச் சுற்றி பல்வேறு விமர்சனங்களும், கருத்துகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதிலும், குறிப்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் அலப்பறை தாங்க முடியாமல் உள்ளது. குறிப்பாக, நேற்றைய முன்தினம் கூட தேனி மாவட்ட தவெக நிர்வாகியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு ஆளுயர மாலையை ராட்சத கிரேன் மூலம் அணிவித்தனர்.
இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்படி நாளுக்கு நாள் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் நடவடிக்கை விஜய்க்கு வெறுப்பை உண்டாக்கி உள்ளது போல் தெரிகிறது. அது மட்டுமல்லாமல், நம்மை ட்ரோல் செய்பவர்களையும் கண்ணியமாக எதிர்வினையாற்ற வேண்டும் என விஜய் தவெக மாநாட்டிலே தெரிவித்து இருந்தார்.
இருப்பினும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பல சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆளும் திமுக அரசின் அவலங்கள் என தினம் தினம் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. இதுவரை சில பொதுப் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து உள்ள விஜய், இது போன்ற பதிவுகளை விரும்பவில்லை என்றே தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். அதேநேரம், எந்தக் காரணத்தைக் கொண்டும், யாரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடக் கூடாது எனவும், எதிர்தரப்பினர் தரம் தாழ்ந்து பேசினாலும் அவர்களுடன் நம் (தவெக) கட்சியினர் மல்லுக்கட்ட கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளதாக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியுள்ளார்.
மேலும், தொலைக்காட்சி நெறியாளர்களிடம் எடுத்துரைத்து, நமது விவாதங்களை புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற விவாதங்களில் பங்கேற்கச் செல்பவர்கள் பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது. மேலும், நம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையிலேயே பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல், மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைக் கொண்டு விமர்சனம் செய்யக் கூடாது என்றும், பேசுபவர்கள் பேசிவிட்டு போகட்டும், எனவே, மற்றக் கட்சி நிர்வாகிகளை எக்காரணம் கொண்டும் மரியாதை குறைவாக பேசக்கூடாது என்றும் கூறியுள்ளார். கட்சிக் கொள்கை, கொடி விளக்கம், கட்சியின் பெயர் காரணங்கள் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும்.தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை உள்வாங்கி கருத்தியல் வாயிலாக விவாதித்து மிளிர செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: அமரன் பட வில்லனை உருகி உருகி காதலித்த உலக அழகி.. இந்த நடிகையா?
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றுடன் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் விஜய் கூறி உள்ளதாக என் ஆனந்த் கூறி இருக்கிறார். ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மிகவும் கடுமையாக விஜயை விமர்சனம் செய்து வரும் நிலையில், சோஷியல் மீடியாவில் இரு தரப்பும் முட்டி மோதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.