அப்பா போல் விஜய் அண்ணா செய்தால் கூட்டணி.. விஜய பிரபாகரன் செக்!
Author: Hariharasudhan11 February 2025, 7:50 pm
தேர்தலில் நின்று விஜய் தன்னை நிரூபித்த பின்னரே, அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
மதுரை: மாமன்னர் திருமலை நாயக்கரின் 442வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து பேசிய விஜய பிரபாகரன், “விஜய் அண்ணா தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும். அப்பா (விஜயகாந்த்) 2005ஆம் ஆண்டில் கட்சியைத் தொடங்கி தேர்தலில் நின்று, 12 சதவீத வாக்குகளைப் பெற்ற பின்னரே கூட்டணி வைத்தார்.
அப்பாவைப் போல விஜய் அண்ணா தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும். தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே, அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம். அதிமுகவுடன் தான் தற்போது கூட்டணியில் இருக்கிறோம்.
![Vijaya Prabhakaran on TVK](https://ffebb5a0.delivery.rocketcdn.me/wp-content/uploads/2025/02/TVK-vijay-1.jpg)
எதிர்காலத்தில் கூட்டணி எப்படி அமையும் எனக் கூற முடியாது. தேர்தலுக்கு முன்னர் எதுவும் மாறலாம், சூழலுக்கு ஏற்றவாறு எங்களின் நிலைப்பாடும் மாறும். அதிமுகவுக்குள் நிலவும் பிரச்னைகளை சரி செய்வார்கள், அனைவரையும் ஒன்றிணைப்பது தொடர்பாக அவர்கள் முடிவெடுப்பார்கள்.
இதையும் படிங்க: தவெக வாக்கு வாங்கி இவ்வளவா? பிகே கணக்கு பலிக்குமா? விஜயின் வியூகம் என்ன?
தேமுதிக பொதுச் செயலாளர் (பிரேமலதா விஜயகாந்த்) என்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடச் சொன்னார்கள், போட்டியிட்டேன், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடச் சொன்னாலும் போட்டியிடுவேன்” எனக் கூறினார். மேலும், மாநிலங்களவை எம்பி பதவி விஜய பிரபாகரனுக்கு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.