வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்த் உடல் – கதறி அழுத பிரேமலதா!
Author: Rajesh28 December 2023, 10:37 am
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.
இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விஜயகாந்தின் உடலை பார்த்த அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் கதறி அழுதனர். அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி நின்று கண்ணீர்விட்டு அழுதனர். அப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் துயரம் தாங்க முடியாமல் கதறி அழுத புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் மறைவிற்கு, திரைபிரபலன்கள் , தொண்டர்கள் , ரசிகர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.