நினைவிடமாக மாறும் விஜயகாந்த் சமாதி… அணையா ஜோதியுடன் காட்சி தரும் கோயம்பேடு அலுவலகம்!!
Author: Udayachandran RadhaKrishnan30 December 2023, 1:57 pm
நினைவிடமாக மாறும் விஜயகாந்த் சமாதி… அணையா ஜோதியுடன் காட்சி தரும் கோயம்பேடு அலுவலகம்!!
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அடக்கம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு கண்ணீர் மல்க பிரேமலதா நன்றி தெரிவித்தார்.
அப்போது, அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் தொண்டர்கள் வழிபடும் நினைவிடமாக மாற்றப்படும். அந்த நினைவிடத்தில் அணையா தீபம் ஏற்றி வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை பிரேமலதா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் சுமார் 1000 சதுர அடி பரப்பளவு கொண்டதுதான்.
அந்த இடத்தில் மணி மண்டபம் அமைத்து எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் வைக்கப்பட்டு உள்ளது போல் அணையா ஜோதி வைக்கப்படுகிறது, விஜயகாந்த் உருவப்படமும் அதில் இடம் பெறுகிறது.
நினைவிடத்துக்கு வரும் தொண்டர்கள் மணிமண்டபத்தை சுற்றி வந்து விஜயகாந்த் உருவப் படத்தை வணங்கி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இறந்து 5-வது நாளில் செய்யப்படும் சடங்குகள் நாளை மறுநாள் (திங்கள்) செய்யப்படுகிறது. அதன் பிறகு பணிகள் தொடங்க உள்ளது. இதற்கிடையில் நினைவிட வரைபடமும் தயாராகிவிடும் என்றனர்.
பணிகளை தொடங்கி ஒரு மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் கோயம்பேடு ரோட்டில் இருந்து பார்த்தாலே தெரியும் வகையிலும் அமைக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.