’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!
Author: Hariharasudhan4 March 2025, 1:53 pm
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில், “நேற்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி மக்களிடம் பேச விரும்புகிறேன். நேற்றைய தீர்ப்பின்படி, செட்டில்மெண்ட் செய்யச் சொல்லியுள்ளனர். இது பற்றி ‘விஜயலட்சுமிக்கு சீமான் ரூ.10 கோடி கொடுத்தார்’ என எழுத ஆரம்பித்த விடுவர்.
இதன் மூலம் அபாண்டமான பழி சுமத்த ஆரம்பித்துவிடுவார்கள். உயர் நீதிமன்றத்தின் எனது வழக்கை ரத்து செய்யச் சொல்லி சீமான் வழக்கு தொடுத்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வாதாடினர். அதன் அடிப்படையிலே சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேபோல், உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தபோது, என் சார்பாக ஏன் யாரும் வாதாடவில்லை? நான் சீமானிடம் பேசினால் காசுக்காக செய்கிறேன் என்று சொல்கிறீர்களே, நேற்று ஏன் என் சார்பாக யாரும் உச்ச நீதிமன்றத்தில் போராடவில்லை?
எனக்கு எந்த நீதியும், நியாயமும் இந்த வழக்கில் கிடைக்காது என்பதை நான் தெரிந்து கொண்டேன். இதைத் தாண்டி நான் எந்தப் போராட்டமும் பண்ணப் போவதில்லை. யாரும் சீமானுக்கு எதிராகப் பேசுவதில்லை. எனவே, இதில் இனிமேல் போராடும் அவசியம் எனக்கு கிடையாது. மேலும், இதுவரை மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?
சீமான் – விஜயலட்சுமி வழக்கு: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீமான் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தடை கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.