திமுக மட்டுமல்ல… யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்போம் : வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா
Author: Babu Lakshmanan13 July 2022, 1:51 pm
எந்த ஆட்சி வந்தாலும் வணிகர்களுக்கு விரோதமாக இருந்தால் நாங்கள் எதிர்ப்போம் வணிக சங்கங்களின் மாநிலத் தலைவர் என்று விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சி தலைமை மருத்துவமனை அருகில் நடைபெற்ற புதிய கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த வணிக சங்கங்களின் மாநிலத் தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், அவர் கூறியதாவது :- உணவு தானியங்களுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்வு சம்பந்தமாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து சென்னையில் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். குறிப்பாக தமிழக முதல்வரை நாளை சந்தித்து எதிர்ப்புகளை பதிவு செய்து அழுத்தம் கொடுக்க இருக்கிறோம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடத்திலும்,உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் அகில இந்திய செயலாளர் முறையிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 கட்ட போராட்டம் சென்னை கூட்டத்தில் அறிவிப்போம். இந்த போராட்டம் வழக்கம் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கும், எனக் கூறினார்.
அப்போது, தமிழக அரசு தனக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு ஆர்டர் தருவதாக வந்த குற்றச்சாட்டுக்கும், பொங்கல் பொருள் வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவில்லை என்று கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக அரசு டெண்டர்களில் தமிழகத்தில் தான் தரமான கம்பெனிகளில் பொருள் வாங்க வேண்டும். அதேபோல, ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட உள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும்.
பிளாஸ்டிக் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறதோ, அங்கு தடை செய்ய வேண்டும். ITC கம்பெனிகள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை தயாரிக்கிறார்கள். அதை தடை செய்யாமல் உள் நாட்டு வணிகத்தை முடக்குவது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்துகிறோம், என்றார்.
கடந்த அரசை போல இந்த அரசை எதிர்ப்பதில்லையே என்ற கேள்விக்கு, அந்நாள், இந்நாள் ஆட்சியாளர்கள் என்று கிடையாது. எந்த ஆட்சியாளர்களும் வணிகர்களுக்கு விரோதமாக போனால் எதிர்ப்பதற்க்கு தயங்காது. லூலூ மால், ஜியோ போன்ற வணிக நிறுவனங்கள் வருவதை எதிர்ப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு வாழ்வுரிமையை காப்பாற்ற வணிகர் பேரமைப்பு உறுதியாக இருக்கிறது, எனக் கூறினார்.
உங்கள் எதிர்ப்பை மீறி லூலூ மால் வந்தால் என்ற கேள்விக்கு, “வரும் போது அதை பற்றி பேசுவோம் கட்டாயம் எதிர்ப்போம்,” என்றார்.