விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்… முன்னிலையில் திமுக : அதிகாரிகளுடன் பாமக வாக்குவாதம்!
Author: Udayachandran RadhaKrishnan13 July 2024, 10:36 am
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி (புதன் கிழமை) அன்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட்டுள்ளார்.
பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டுள்ளார்.
அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. மொத்தம் 29 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 2.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின.
மொத்தம் 552 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ண தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. மொத்தம் 789 தபால் வாக்குகள் பதிவாகின. அவைகள் 2 மேசைகளில் எண்ணப்பட்டன.
பின்னர் மிண்ண்னு வாக்குப்பதிவு எண்ணிக்கை 14 மேசைகளில் 20 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 134 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எண்ணும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 5வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 31,151 வாக்குகளும், பாமக வேட்பாளர் அன்புமணி 11,481 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 1,763 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனிடையே வாக்கு எண்ணிக்கையின் போது திமுக – பாமக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.தபால் வாக்குகள் எண்ணும் இடத்தில் அதிகாரிகளுடன் பாமக முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.