‘எங்க கிணத்த காணோம்-ங்க’… வடிவேலு பாணியில் நடந்த சம்பவம் ; கவனத்தை ஈர்த்த கிராம மக்களின் போஸ்டர்…!!
Author: Babu Lakshmanan22 May 2024, 11:08 am
வடிவேலு கிணறு காணவில்லை என்ற நகைச்சுவை காட்சி போல் உத்திரமேரூர் அருகே அரசு பொது கிணற்றை காணவில்லை என கிராம பொதுமக்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரணை ஊராட்சியின் சார்பு கிராமமான நடுப்பட்டு கிராமத்தில், பஜனை கோவில் தெருவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கிணறு தோண்டப்பட்டு, கடந்த மாதம் வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
கிணற்றுக்கு போதிய பாதுகாப்பு மூடிகள் இல்லாததால் கடந்த 22ஆம் தேதி 30 வயது மதிக்க பெண் ஒருவர் அதன் மேல் அமர்ந்து இருந்த நிலையில் திடீரென கிணற்றில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவரிடம் பொதுமக்கள் சார்பாக அந்த கிணற்றின் மேல் மூடி அமைக்க வேண்டுகோள் விடப்பட்டது.
மேலும் படிக்க: ரூ.4 கோடி விவகாரம்… சிபிசிஐடி சம்மனை எதிர்த்து வழக்கு… சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய பாஜக நிர்வாகி…!!
இந்நிலையில், சில தினங்களுக்குள், அந்த கிணற்றினை ஜேசிபி உதவியுடன் தரைமட்டமாக்கி மூடி உள்ளனர். இதுகுறித்து திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது முறையான பதில் இல்லாததால், BDO உள்ளிட்ட பல துறை அரசு அலுவலருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிணறை காணவில்லை என சமூக வலைதளங்கள் , சுவரொட்டிகள் மூலம் அப்பகுதியை சுற்றி விளம்பரம் செய்து வருகின்றனர். வடிவேலு திரைப்பட நகைச்சுவை காட்சி போல் கிணற்றை காணவில்லை என்று பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.