பரந்தூர் விமான நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு ; குழந்தைகளை தேர்வு எழுத பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்..!!
Author: Babu Lakshmanan23 September 2022, 1:52 pm
காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து 13 கிராமங்களில், விமான நிலையம் அமைப்பதற்கு நில எடுப்புக்காக குடியிருப்பு பகுதிகள் அகற்றப்பட உள்ளதாக வந்த தகவலை அடுத்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
ஏகனாபுரத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்களை 13 கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் இன்று பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் வகுப்பறைக்கு செல்லாமல் எதிர்ப்புகளை தெரிவித்து பள்ளி புறக்கணிப்பு செய்தனர். ஏகனாபுரம் பஞ்சாயத்து ஆரம்ப நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. இதில் 111 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பகுதியில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ள நிலையில் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள், நூற்றாண்டு காண உள்ள பள்ளி ஆகியவை அகற்றப்பட உள்ளது. எனவே, இதனை கண்டித்து மாணவ, மாணவிகள் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்த விஷயம் இந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், குடியிருப்பு வாசிகள் தங்களது எதிர்ப்பினை தொடர்ந்து இரவு வேலையில் தங்களது கிராமத்தில் அறவழியில் போராட்டம் செய்து வந்த நிலையில், 58வது நாளான இன்று அந்த கிராமத்தில் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் தங்களது வகுப்பினை புறக்கணிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் விமான நிலையம் நில எடுப்பில் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்களான நாகப்பட்டு ,நெல்வாய், மேலேறி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் தங்களது பிள்ளைகளை தொடக்கப் பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.