பேருந்து நிலையத்தில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்… ஹவாலா பணமா? போலீசார் தீவிர விசாரணை
Author: Babu Lakshmanan22 October 2022, 3:29 pm
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கியது ஹவாலா பணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கி படித்து வரும் மற்றும் வேலை செய்து வருபவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் இரவு முதல் புறப்பட்டுச்சென்ற வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரேனும் மர்ம நபர்கள், குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் விழுப்புரம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அந்த பையினுள் கட்டுக்கட்டுகளாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் எண்ணிப்பார்த்ததில் ரூ.11 லட்சத்து 22 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அருண் குமார் என்பது தெரியவந்தது மேலும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மேலும், அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் ஏதும் அவரிடம் இல்லை. இதனால், அது ஹவாலா பணமாக இருக்குமோ என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து, அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்ததோடு இதுபற்றி விழுப்புரம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து அருண்குமாரை அவர்களிடம் ஒப்படைத்தனர்.. தொடர்ந்து, அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டுகளாக பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.