DJ-வுக்கு ஆட்டம், பாட்டம் போட்ட இளைஞர்கள்.. வாய்க்கு வந்ததை திட்டிய காவலர்..? விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
23 September 2023, 8:36 am
Quick Share

காட்பாடி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவின் போது டி.ஜே வைத்து நடனமாடிய இளைஞர்களை தடுக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறி, இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தி கடந்த 18ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், வேலூர் மாநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட சிலைகள் முதல் கட்டமாக நேற்று முன்தினம் கரைக்கப்பட்டது. நேற்று இரண்டாம் கட்டமாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நடைபெற்றது.

அப்போது, காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நீதிமன்ற உத்தரவை மீறி டி.ஜே வைத்து நடனமாடியுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் அந்த இளைஞர்களிடம், நீதிமன்ற உத்தரவுபடி டிஜேவுக்கு அனுமதி இல்லை என்றும், உடனடியாக அதனை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இதனால் போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ், அங்குள்ள இளைஞர்களை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறி காங்கேயநல்லூர் ஆர்ச் பகுதியில் சாலையில் குறுக்கே பேரிகார்டுகளை போட்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களை தகாத வார்த்தையில் பேசிய உதவி காவல் ஆய்வாளர் ஆதர்ஷ் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி டிஎஸ்பி பழனி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர், அங்கிருந்த ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமான சூழ்நிலையும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது

  • snehan recent news சம்பவம் செய்த சினேகன்…திகைத்து போன கன்னிகா..!என்னவா இருக்கும் ?
  • Views: - 323

    0

    0