கோவையில் ”பாரத் மாதா கி ஜே” கோஷத்துடன் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் : 190 சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு… போக்குவரத்து மாற்றம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 செப்டம்பர் 2022, 7:12 மணி
கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்பினர் சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 190″க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவை நடக்கவில்லை.
ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் 31″ம் தேதி சிவானந்தகாலனி, ரத்தினபுரி, நல்லாம்பாளையம், கணபதி, கவுண்டம்பாளையம், மணியகாரன்பாளையம், புலியகுளம், ராமநாதபுரம், சாய்பாபாகோயில், குனியமுத்தூர், கோவைப்புதூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி, சிவசேனா, அனுமன்சேனா, பாரத்சேனா, சக்திசேனா, இந்துமக்கள் கட்சி (தமிழகம்) உள்ளிட்ட இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த சிலைகளை கரைக்க சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் மற்றும் முத்தண்ணன் குளங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக குளக்கரைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி, முத்தண்ணன் குளங்களில் கரைக்கப்பட்டன. இதை தொடர்ந்து 5 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகளை இந்து அமைப்பினர் ஊர்வலமாக கொண்டு சென்று குளங்களில் கரைத்தனர்.
இதற்காக, மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் விநாயகர் சிலை கரைப்பு நடந்த நீர்நிலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இன்று ஒரே நாளில் மாநகரில் மொத்தம் 190″க்கும் விநாயகர் சிலைகள் பூஜிக்கப்பட்டு மீனவர்கள் துணையோடு கரைக்கப்பட்டது ,. 5-வது நாளான நாளை மறு நாள் மீதமுள்ள அனைத்து சிலைகளும் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0
0