கோவை மருதமலை கோவில் கும்பாபிஷேகத்தில் விதி மீறல்? நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!
Author: Udayachandran RadhaKrishnan9 April 2025, 1:24 pm
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக் கூறி, இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் கோவை கோட்ட துணை ஆணையர் செந்தில் குமாருக்கு தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதையும் படியுங்க: ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? 30 ஆண்டுகளுக்கு பின் காரணத்தை கூறிய ரஜினிகாந்த்!
சண்டிகேஸ்வர சேவா அறக்கட்டளையின் தலைவர் சுரேஷ்பாபு அறிவுறுத்தலின்படி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.அந்த நோட்டீஸில், தமிழ் வேள்வி ஆசிரியை மற்றும் வேத விற்பன்னர்களை சமமாக கருதிட உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள துணை ஆணையர், உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், கோயில் நிர்வாகம் தமிழ் வேள்வி ஆசிரியைக்கு உரிய மரியாதை அளிக்கும் என்று உறுதி அளித்து இருந்தார்.
மேலும், 36 யாகசாலை குண்டங்களில் 36 வேத தமிழ் அறிஞர்களைக் கொண்டு யாக சாலை வேள்வி நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி, மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் செயல்பட்டு உள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டி உள்ளார்.
குறிப்பாக, 31.03.2025 மற்றும் 02.04.2025 தேதிகளில் நடைபெற்ற வேள்வி வழிபாடுகளில் இந்த வாக்குறுதி மீறப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். உயர் நீதிமன்றத்தில் அளித்த எழுத்துப் பூர்வமான வாக்குறுதியையும், நீதிமன்றம் பதிவு செய்த இடைக்கால உத்தரவையும் மீறியது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும், வேண்டுமென்றே பொறுப்பை மீறுவது நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் செயலாகும் என்றும் அந்த நோட்டீஸில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
யாக சாலை வேள்வி குண்டா நால்வுருவல் அதிக சத்தத்துடன் ஒலித்தது என்றும், 36 யாகசாலை குண்டங்களில் தமிழ் அறிஞர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தனது நேரடி ஆய்வில் கண்டு அறிந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி திட்டமிட்டு மீறப்பட்டு உள்ளதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
ஆகவே, 36 வேத தமிழ் அறிஞர்கள் 36 யாகசாலை குண்டங்களில் தமிழில் யாகசாலை வேள்வி செய்ததற்கான ஆதாரங்களையும், வீடியோ பதிவுகளையும் இந்த அறிவிப்பைப் பெற்ற நாளில் இருந்து மூன்று நாட்களுக்குள் வழங்கும்படி துணை ஆணையருக்கு தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் கோரி உள்ளது. அவ்வாறு வழங்கத் தவறினால், நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.