விருதுநகர் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு : 4 பேருக்கு ஏப்ரல் 4 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan29 March 2022, 9:50 pm
விருதுநகர் : இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகரில் 22 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் திமுகவை சேர்ந்த ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் நால்வரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி சரவணன் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரியான வினோதினி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்பி.முத்தரசி ஆலோசனைகளை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதனையடுத்து, வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும், ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் 7 நாட்கள் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதி மன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ( பொறுப்பு ) நீதிபதி கோபிநாத் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என உத்தரவிட்ட நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள நால்வரையும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர்.
இவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக போடப்பட்ட மனுவின் மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் நால்வரையும் வரும் ஏப்ரம் 4 ஆம் தேதி மாலை வாரை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நால்வரையும் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்திற்க்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.