கூழாங்கல் கடத்தல் முறியடிப்பு… லாரியை மடக்கிய அதிகாரிகள் மீது கொலைவெறி தாக்குதல்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!!

Author: Babu Lakshmanan
27 December 2023, 10:01 pm

விருதாச்சலம் அருகே கூழாங்கல்லை கடத்திய லாரியை மடக்கி பிடித்த, கனிமவளத்துறை அதிகாரிகளை கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் கூழாங்கல் கடத்தப்படுவதாக விழுப்புரம் கனிமவள துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் நேற்று இரவு விழுப்புரத்தைச் சேர்ந்த பறக்கும் படை அதிகாரிகளான, விழுப்புரத்தை சேர்ந்த கனிமவளத்துறை உதவி இயக்குனர் ராமஜெயம், உதவி புவியியயாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கார் ஓட்டுனர் சேகர் ஆகிய மூவரும் நேற்று நள்ளிரவு கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கொக்கம்பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, லாரியில் கூழாங்கற்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூழாங்கல்லை திருடி, கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வழியாக கொண்டு செல்ல முற்பட்டதும் தெரிய வந்தது. இதனால் கனிமவளத் துறை அதிகாரிகள், லாரியை பறிமுதல் செய்து, உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர்.

அந்த சமயம் கொக்கம்பாளையம் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, பொலிரோ காரில் வந்த மர்ம கும்பல், லாரியை வழிமறித்து, லாரிக்குள் இருந்த கனிமவளத்துறை அதிகாரிகளை கீழே இறக்கி, கொடூரமாக தாக்கி உள்ளனர். அப்போது கூழாங்கல் ஏற்றி வந்த லாரியை அருகே உள்ள பள்ளத்தில் தலைக்கீழாக கவிழ்த்து விட்டு, அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளது.

மேலும், அரசு அதிகாரிகள் கழுத்தில் அணிந்து இருந்த, தங்க நகைகளை பறித்து விட்டு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலால் தலை, கை கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயத்துடன், நடுரோட்டில் நின்று இருந்த அரசு அதிகாரிகளை, அவ்வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, கனிமவளத் துறை அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளாக சிகிச்சை முடித்துவிட்டு, விருதாச்சலம் அடுத்த ஆலடி காவல் நிலையத்தில், தன்னை தாக்கிய மர்ம கும்பல் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆலடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கனிமவளத்துறை அதிகாரிகளை தாக்கியது பத்துக்கும் மேற்பட்டோர் எனவும், கூழாங்கல் கடத்தி வந்த லாரியை பள்ளத்தில் கவிழ்த்து விட்டு சென்ற மர்ம கும்பல், நேற்று நள்ளிரவில் ஜேசிபி மூலம், லாரியை மீட்டு, இருளக்குறிச்சி கிராமத்தின் அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் பதுக்கி வைத்த நிலையில், காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், முக்கிய குற்றவாளியான லாரியின் உரிமையாளரான கொட்டாரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கூழாங்கல் கடத்தலை தடுக்க முயன்ற கனிமவளத்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவம் விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 856

    0

    0