‘இருக்கு ஆனா இல்ல’… அரசு மருத்துவமனையில் சப்-கலெக்டருக்கே இந்த நிலைமையா..? கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்..!!

Author: Babu Lakshmanan
6 July 2023, 10:35 am

கடலூர் ; விபத்தில் சிக்கிய விருத்தாச்சலம் சப்-கலெக்டருக்கே அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க முடியாத ஏற்பட்டது அரசு ஊழியர்களிடையே முனுமுனுப்பை உண்டாக்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப் கலெக்டராக (பொறுப்பு) லூர்துசாமி பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வதற்காக, அரசு வாகனத்தில் டிரைவர் வேல்முருகனுடன் விருத்தாச்சலத்தில் இருந்து புறப்பட்டு, கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வடலூர் அருகே நடுரோட்டில் மது போதையில் ஆசாமி ஒருவர் வந்ததால், அவர் மீது மோதாமல் இருப்பதற்காக, டிரைவர் வேல்முருகன் வாகனத்தை திருப்பும் போது, தலைகீழாக வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த சப் கலெக்டர் லூர்துசாமி மற்றும் டிரைவர் வேல்முருகனை மீட்டு, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர்.

அப்போது அவர்கள் இருவர்களுக்கும், சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், சப் கலெக்டர் லூர்துசாமிக்கு, கழுத்தில் பலத்த வலி இருந்ததால், எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்தபோது, எக்ஸ்ரே எடுக்கும் வசதி அரசு மருத்துவமனையில் இருந்தும், டெக்னீசியன் இல்லை எனக் கூறியதால், சப் கலெக்டர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு, பாலக்கரையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் வந்து எக்ஸ்ரே எடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்.

விருத்தாச்சலம் உட்கோட்டத்திற்கு சப் கலெக்டராகவும், நடுவர் நீதிமன்ற நீதிபதியாகவும், உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவருக்கே, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில், எக்ஸ்ரே எடுக்க முடியாத அவல நிலை ஏற்படும் போது, பாமர ஏழை, எளிய மக்கள் எந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பார்கள் என அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இச்சம்பவத்தால் அரசு ஊழியர்கள் பலர் கோபம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை சப் கலெக்டர் எடுப்பாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

  • kalakalappu 3 movie update குஷ்பூவுடன் கை கோர்த்த பிரபல தொழில் அதிபர்…கலகலப்புக்கு இனி பஞ்சமில்லை..!
  • Views: - 365

    0

    0