மீண்டும் சத்து மாத்திரை சர்ச்சை.. மாணவிகள் மயக்கம் : கோவையை தொடர்ந்து பீதியை கிளப்பிய தருமபுரி !!
Author: Udayachandran RadhaKrishnan17 March 2023, 9:41 am
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் சுமார் 94 மாணவ மாணவிகள் படித்து வருகின்றார்கள். 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது 6ஆம் வகுப்பு மாணவிகள் சிலர் தங்களது வகுப்பறையில் இருந்தனர்.
அப்போது அவர்கள் ஆசிரியரின் மேஜையில் இருந்த சத்து மாத்திரையை சாப்பிட்டனர். சத்து மாத்திரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சர்மிளா, தேகா, அஷிதா, ஷாலினி, ஷிபிநயா ஆகியோர் வாந்தி எடுத்தனர்.
மேலும் அவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் அங்கிருந்த மாணவிகள் பதற்றம் அடைந்தனர். மயங்கி விழுந்த மாணவிகளை ஆசிரியர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் நீலகிரியில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகளில் ஒரு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.