முதலமைச்சரின் வருகையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர் பலி : ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறிய திமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2022, 5:42 pm

திண்டுக்கல் : தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த திமுக தொண்டரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தனர்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக, சனிக்கிழமை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தேனி நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அங்கிருந்து தரைவழி பயணமாக, பெரியகுளம், வத்தலகுண்டு செம்பட்டி, திண்டுக்கல் நிகழ்ச்சிக்கு சென்றார்.

அப்போது, நிலக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பாக, செம்பட்டியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நிலக்கோட்டை ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் இருந்து திமுக தொண்டர்கள் வந்திருந்தனர்.

அதேபோல், நிலக்கோட்டை அருகே உள்ள குல்லலக்குண்டு ஊராட்சி கல்லடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக தீவிர விசுவாசியும், கூலித்தொழிலாளியுமான, ஆரோக்கியசாமி (வயது 60) அவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 58) உட்பட அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செம்பட்டி வந்திருந்தனர்.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அந்த வரவேற்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு, சென்றபோது, தொண்டர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி கல்லடிபட்டியைச் சேர்ந்த திமுக தொண்டரான ஆரோக்கியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலினை பார்க்க வந்த இடத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ஆரோக்கியசாமிக்கு ஆரோக்கியமேரி என்ற மனைவியும், அருள்ராஜ் (வயது 42) ஸ்டாலின் (வயது 38) என்ற 2 மகன்களும், ஞானசௌந்தரி (வயது 40) என்ற மகளும் உள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும், செம்பட்டி போலீசார் ஆரோக்கியசாமி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விசாரணை செய்து வருகின்றனர்.

உயிரிழந்த ஆரோக்கியசாமி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி ரூ.5 லட்சம் வழங்க அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டார்.

அதன்பேரில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆரோக்கியசாமி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிதியுதவியை வழங்கினார். அப்போது மாவட்ட துணைச்செயலாளர் நாகராஜன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் சவுந்திரபாண்டியன், மணிகண்டன், திண்டுக்கல் நகர செயலாளர், துணைமேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணைஅமைப்பாளர்கள் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 1288

    0

    0