Sandwich சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்… அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. தற்காலிகமாக உணவகம் மூடல்..!!
Author: Babu Lakshmanan26 September 2022, 3:43 pm
வேலூர் : வேலூர் அருகே சாண்ட்விச் சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆற்காடு அடுத்த கோட்டை மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் சாலமன்(38). இவர் அந்த பகுதியில் தேவ ஆலயம் ஒன்று நிறுவி ஊழியம் செய்து வருகிறார். இவரது மனைவி ரூபி (34). இவர்களது மகன் ரூபன் (7).
சனி, ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் திண்டிவனத்தில் இருந்து ஜான்சன் (9), சைமன் (10)ஆகியோர் தனது மாமாவான சாலமன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் எதிரே செயல்பட்டு வரும் ரஷீத் கேண்டினுக்கு, ரூபி, சைமன், ஜான்சன், ரூபன் மற்றும் சாலமன் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு சிறுவர்கள் சாண்ட்விச் கேட்டதால், சிறுவர்களுக்கு அதனை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அதனை உட்கொண்ட சிறுவர்கள் சிறிது நேரத்திலேயே ஒவ்வாமை காரணமாக, வாந்தி உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிறுவர்களை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் வந்து மூன்று சிறுவர்களுக்கும் ஃபுட் பாய்சன் ஆகியுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், தொடர் சிகிச்சை மேற்கொண்டும் சிறுவர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால், வேலூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறை வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ரஷீத் கேண்டினில் தற்போது ஆய்வு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் இறுதியில் காலாவதி ஆன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. மேலும், ரசித் கேண்டினை தற்காலிகமாக மூடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.