இப்போவே இப்படியா? சென்னையைச் சூழ்ந்த மழை வெள்ளம்.. மிரட்டும் ஃபெஞ்சல்
Author: Hariharasudhan30 November 2024, 12:41 pm
வேகமாக நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: தெற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) சென்னையை ஸ்தம்பிக்கச் செய்து உள்ளது. சென்னையின் அனைத்து இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் வாகங்கள் பாதி மூழ்கும் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது.
முக்கியமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. அதேபோல், குரோம்பேட்டை நெஞ்சக மற்றும் அரசு பொது மருத்துவமனை வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். வண்ணாரப்பேட்டை, அசோக் நகர், பெருங்குடி ஆகிய இடங்களிலும் மழைநீர் சாலைகளில் தேங்கி உள்ளது.
இதனிடையே, கடலோரப் பகுதிகளான காசிமேடு, எண்ணூர், பழவேற்காடு, பொன்னேரி, மீஞ்சூர், ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி உள்ளனர். இதனால் கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் – வீலர், பழவந்தாங்கல், ஆர்பிஐ சுரங்கப்பாதை, பெரம்பூர் மற்றும் அஜாக்ஸ் ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தற்போது 13 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதால், மழையின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, காலையில் வழக்கம்போல் இயங்கி வந்த சென்னை புறநகர் ரயில் சேவை, தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையம் பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, வேளச்சேரி மற்றும் ராயபுரம் மேம்பாலங்களில் கார்கள் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டு உள்ளது. மேலும், இன்று காலை 449 கன அடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து, தற்போது 3 ஆயிரத்து 745 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னையில் கனமழை.. பாதை மாறுமா?
இதனையடுத்து, சென்னை எழிலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், இதுவரை சென்னையில் எங்கும் மழைநீர் தேங்கவில்லை எனவும் கூறினார்.