விரைவாக, சுமூகமாக தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2022, 8:48 pm

திருவாரூர் : தேசிய கல்விக் கொள்கையை விரைவாகவும் சுமூகமாகவும் அமல்படுத்த வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு அரங்கில் இரண்டு நாள் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது.

தேசிய கல்விக் கொள்கையை விரைவாகவும் இலகுவாகவும் நடைமுறைப் படுத்துவது குறித்த செயல் திட்டம் வகுப்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட பின்பு தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. பொதுவாக நிகழ்ச்சியின் இறுதியில் இசைக்கப்படும் தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட்டு அதன்பிறகு தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பேசியதாவது, பிரதமரின் பார்வையில் இந்தியா ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி உள்ளது. ஆங்கிலேயர்கள், ஐரோப்பியர்கள் என பலர் நமது பெருமையை அழித்துள்ளனர். தேசிய கல்வி கொள்கை மூலமாக தமிழ் மொழிகளில் உள்ள நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து அனைவரும் படிக்கலாம்.

நம்முடைய அடையாளங்களை தெரிந்துகொள்ள தேசிய கல்வி கொள்கை பயன்படும். தேசிய கல்வி கொள்கை திட்டம் சுகமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை என்பது பல்வேறு அரசாங்கங்களால் மறைக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் கொள்கையாகும். உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடும் போது 40% இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. படிப்படியாக அதனை ஆங்கிலேயர்கள் அளித்தனர்.

இந்திய மக்களின் உழைப்பு, தளவாடங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களை ஆங்கிலேயர்கள் மற்றும் பிற நாட்டவர் இங்கிருந்து கொண்டு போய் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொண்டு சேர்த்தனர். இங்கு நடைபெறும் இரண்டு நாட்கள் தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கு நிறைவு பெற்ற பின்னர் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

அதிகாரிகள் தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக படித்து அதனை உணர வேண்டும். புதிய கல்விக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தினால் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லும். விரைவாகவும் சுமூகமாகவும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். கொள்கைகள் அனைத்தும் எழுத்தளவிலேயே உள்ளன.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மட்டுமின்றி தொழில்சார் கல்வி நிறுவன இயக்குனர்கள் இடமும் தேசிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது விரைவிலேயே அதன் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 673

    0

    0