அனைவருக்கும் சமமான, தரமான கல்வி வழங்க அரசை வலியுறுத்துவோம் : பல்கலைக்கழக கூட்டமைப்பின் தலைவர்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2022, 12:41 pm

கோவை : கோவையில் நடைபெறும் தென் மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பில் இந்தியா முழுவதும் அனைவருக்கு சமமான, தரமான கல்வி வழங்குவது குறித்த விவாதித்து முக்கிய கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்த உள்ளதாக இந்திய பல்கலைகழக கூட்டமைப்பின் தலைவர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

இந்திய பல்கலைக்கழகங்களில் கூட்டமைப்பின் சார்பில், தென்மண்டல துணைவேந்தர்கள் சந்திப்பு மற்றும் கருத்தரங்கு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ளது.

இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொண்டுள்ள உள்ளனர். இதுகுறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தலைவர் திருவாசகம், பொதுச் செயலாளர் பங்கஜ் மிட்டல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், ஐக்கிய நாடுகளின் நிலையான முன்னேற்ற குறிக்கோள்கள் ஆக உள்ள வறுமையின்மை, பசியின்மை, உடல் நலம், தரமான கல்வி உள்ளிட்ட 17 வகைகளில், நாளை நடைபெறும் தென்மண்டல துணைவேந்தர்கள் சந்திப்பில் இந்தியா முழுவதும், சமமான, தரமான கல்வி வழங்குவது குறித்து விவாதிக்க உள்ளோம்.

மேலும் தற்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு கல்வி மற்றும் மாணவர்களை தயார்படுத்த வேண்டும். தற்போது உள்ள சூழலில் உயர் கல்வியை முடித்து விட்டு வரும் மாணவர்களுக்கு பணிகளுக்கு செல்லும் போது தேவையான திறன் இருப்பது இல்லை, அவற்றை பிற நாடுகளை போல மேம்படுத்த வேண்டும்.

பின்லாந்தில் மொத்த வருவாயில் 20 சதவீதம் தரமான கல்விக்கு ஒதுக்குவதால் அந்த நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியா 125 ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல் மற்ற நாடுகளை விட தரமான கல்வி வழங்க மத்திய , மாநில அரசுகள் பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதித்து, அவற்றை மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கையாக வைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வரும் மார்ச் மாதத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில் தேசிய அளவிலான துணைவேந்தர்கள் சந்திப்பானது நடைபெற உள்ளது. அதில் நாடு முழுவதும் இருந்து வரக்கூடிய சுமார் 600க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய பல்கலைக்கழகம் கூட்டமைப்பின் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதேபோல் இந்த ஆண்டும் பிரதமர் மோடி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1142

    0

    0