ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து 25வது நாளாக விசைத்தறியாளர்கள் போராட்டம் : கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 February 2022, 10:58 am

திருப்பூர் : கூலி உயர்வு கொடுக்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து 25 வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

கோவை திருப்பூர் மாவட்டங்களின் கூட்டமைப்பின் கீழ் ஒன்பது சங்கங்களை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இவர்களிடம் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனர்.


அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாகக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்லடம் இரகத்திற்கு 20% சோமனூர் இரகத்திற்கு 23% கூலி உயர்த்தப்பட்டது. ஆனால் அதை அமுல்படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்களின் மெத்தனமாக இருந்து வருகின்றனர்‌.

இதனை கண்டித்து கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி முதல் இன்று 25 வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நாள் ஒன்றுக்கு ரூ. 50கோடி வீதம் இதுவரை சுமார் 1300 கோடிக்கு அளவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நேரடி மற்றும் மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரம் முன்பு கோவை தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதனை தொடர்ந்து இன்று, திருப்பூர் மாவட்டம் தெக்கலூர்,மங்கலம்,வஞ்சி பாளையம், அவிநாசி,பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்யும்
விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது வீடுகள் மற்றும் விசைத்தறி கூடங்களில் ஜவுளி உறபத்தியாளர்களை கண்டித்து கருப்பு கொடி ஏற்றியும், குதிரையின் மீது ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை பல்லடம் அருகே காரணம் பேட்டையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இன்று கோவையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 2391

    0

    0