களைகட்டிய ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா : திறந்த வெளியில் பிரம்மிக்க வைத்த ஏற்பாடு.. கவனத்தை ஈர்த்த நாட்டுபுறக்கலை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2022, 9:26 pm

கோவை : சரவணம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவில் வண்ண கோலமிட்ட மைதானத்தில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர்.

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் மிக முக்கிய கலையாக ஒயிலாட்டம் உள்ளது. இளம் தலைமுறையினர் தற்போது இக்கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாகி வருகின்றனர். இக்கலையை, கோவை உட்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும் வகையில்,சரவணம்பட்டி, சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு பயிற்சி பெற்ற ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா .சரவணம்பட்டி பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. திறந்த வெளி அரங்கில் கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவை, கலைக்குழுவின் தலைவர் சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு அரங்கேற்ற விழாவை துவக்கி வைத்தார். இதில் கணபதி, அன்னூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

வண்ண கோலமிட்ட மைதானத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய கலை பயிற்சி பெற்றவர்கள் இணைந்து கலைக்குழுவின் ஆசிரியர்கள் நவீன் குமார் ஜெகநாதன், பிரகாஷ் ஆறுச்சாமி, ஆகியோர் ஒருங்கிணைப்பில் செல்வம் குழுவினரின் பம்பை இசை முழங்க, கூடி நின்று ஒயிலாட்டம் அரங்கேற்றம் நடத்தியது கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

கிராமிய கலை குறித்து ஒயிலாட்டம் ஆடி, இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல்கள் பம்பை இசையுடன், முளைப்பாரி, ஒயிலாட்ட சீர் வரிசையுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை, உற்சாகத்துடன் நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1686

    0

    0