என்னது.. மணல் அள்ள முதலமைச்சரே அனுமதி கொடுத்தாரா? மணல் திருட்டு புகார் கூறியவரிடம் உளறல்.. சிக்கிய தாசில்தார்.. வைரலாகும் ஆடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2022, 6:01 pm
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தொப்பம்பட்டி கிராம பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் கிராவல் மண் அள்ள அரசு அனுமதி பெற்றுள்ளதாக தனிநபர் ஒருவர் பகல் நேரத்தில் அனுமதி பெற்றுள்ள பட்டா இடத்திலும், இரவில் அரசுக்கு சொந்தமான இடத்திலும் திருட்டுத்தனமாக கிராவல் மணல் அள்ளி கடத்துவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வியாழக்கிழமை இரவு தொப்பம்பட்யை சேர்ந்த பரமசிவம் மகன் கண்ணன் என்பவர் கிராம நிர்வாக அலுவலரான பெரியண்ணனை தொடர்பு கொண்டு திருட்டு மணல் அள்ளி லாரிகளில் கடத்தி செல்வதாக பேசியிருக்கிறார். அப்போது சம்பவயிடத்துக்கு வருவதாக கூறிய கிராம நிர்வாக அலுவலர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
இதனால் புகார்தாரர் கண்ணன் சமந்தபட்ட மணப்பாறை தாசில்தாருக்கு தொடர்பு கொண்டு புகார் செய்தார். இதற்கு பதிலளித்த வட்டாட்சியர் சேக்கிழார், பர்மிஷன் வாங்கிட்டுதான் மணல் ஓட்டுறாங்க, இதற்கு முதலமைச்சரே அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதனை தடுக்க பொதுமக்களுக்கு எந்த அதிகாரம் இல்லை என்றும் கூறிய அவர் நீ சிவனேனு உட்கார் என்றும் மதுபோதையில் பேசியதாக ஆடியோ ஒன்று வைரலானது.
மேலிட அனுமதி இரவும் பகலும் ஓட்டுவாங்க நீங்க பேசாம தான் இருக்கனும், யாரும் கேட்க கூடாது, என பேசிய தாசில்தார் தனது பெயரை கூற மறுத்து மிரட்டல் விடும் பாணியில் போனை வைய்யுயா என்று பேச்சை முடித்தார்.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் வரை புகார் சென்றது.
இதனை தொடர்ந்து ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் சிவராசு, மணப்பாறை தாசில்தார் சேக்கிழாரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.