அதிகபிரசங்கித்தனம்,, அதிமுகவுக்காக அமைச்சர் பேச்சு.. திமுக கூட்டணிக்கு Good bye? வேல்முருகன் திடுக்!

Author: Hariharasudhan
20 March 2025, 4:56 pm

சேகர்பாபு அதிமுகவைக் காப்பாற்றுவதற்காக என்னை விமர்சனம் செய்கிறார் என பண்ருட்டி எம்எல்ஏ த.வேல்முருகன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தின்போது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் குறித்து பேசிய வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கியதற்கு எதிராக முழக்கம் எழுப்பினார்.

இதனால் வேல்முருகன் பேசிய கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேல்முருகன், இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவையின் நடுவில் வந்து கூச்சலிட்டு கோஷம் எழுப்பினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேல்முருகன் அவை மரபை மீறி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது என்றும், இதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “முதலமைச்சர் இதுவரை இப்படிப்பட்ட வார்த்தைகளை எந்த உறுப்பினர் மீதும் சொன்னதில்லை. வேல்முருகன் இருக்கையைவிட்டு எழுந்துவந்து மிரட்டும் தொணியில் பேசுவதை ஏற்க முடியாது. இது பேரவையை மீறிய செயலாகும்” எனத் தெரிவித்தார்.

MK Stalin Vs T Velmurugan

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “சில நேரங்களில் அதிகப்பிரசிங்கித்தனமாக நடந்துகொள்வது வேதனையாக உள்ளது. இடத்தைவிட்டு எழுந்து வந்து கூச்சல் போடுவது முறை அல்ல. சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து வெளியே வந்த வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சபாநாயகர் இருக்கையின் முன்பு நின்று பேச அனுமதி கொடுங்கள் எனக் கேட்டது தவறா? பேசுவதற்கு அனுமதி கேட்ட என்னை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசினார். அமைச்சர் சேகர்பாபு தவறான தகவலை, முதலமைச்சருக்குச் சொல்லி உள்ளார். அதனை அப்படியே முதலமைச்சர் தெரிவித்தது வருத்தமளிக்கிறது.

இதையும் படிங்க: இளைஞர்களை வலையில் வீழ்த்திய வடமாநில இளம்பெண்.. உல்லாச வாழ்க்கையால் உள்ளதும் போச்சு!

சேகர்பாபு அதிமுகவைக் காப்பாற்றுவதற்காக என்னை விமர்சனம் செய்கிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். என் தாய் மொழி குறித்து பேச வாய்ப்பு தரப்படவில்லை என்றால், point of order எழுப்பி நேரம் கேட்க எனக்கு உரிமை உள்ளது. தமிழுக்கு ஒரு கேடு என்றால் என் உயிரைத் தியாகம் செய்வேன் என்றுதான் கோஷமிட்டேன்” எனக் கூறினார்.

மேலும், தற்போது வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திமுக உடன் கூட்டணியில் உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் என அடுத்தடுத்து கூட்டணியில் இருந்த நிலையில், இன்று ஏற்பட்ட மிகப்பெரிய கருத்து மோதலால் திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகுமா என்ற கேள்வி அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  • Asal Kolaar கஞ்சா வச்சிருக்கியா? நடுரோட்டில் கேட்ட அசல் கோலார்.. நடந்தது என்ன?
  • Leave a Reply