நாக்பூர் வன்முறைக்கு Chhaava படமும் காரணமா? என்ன நடந்தது?
Author: Hariharasudhan18 March 2025, 12:02 pm
நாக்பூரில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
நாக்பூர்: மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தின் குல்தாபாத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதி உள்ளது. கடந்த 1707ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி அவுரங்கசீப் இறந்த பிறகு, அவரது விருப்பத்தின் பெயரில் இங்கு அவரது உடல் புதைக்கப்பட்டது. இந்தக் கல்லறையை பொதுமக்கள் பார்வையிட்டுச் செல்லும் நிலையில், இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக கல்லறை உள்ளது.
இந்த நிலையில், இந்த சமாதியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும், பாலிவுட் வரலாற்றுத் திரைப்படமான ‘சாவா’ தான் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்பதற்கு காரணமாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால், சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகராஜின் கதையான இந்தப் படம் குறித்து மகாராஷ்டிரா பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதம் எழுந்தது.
அப்போது சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, “பலரும் நினைப்பது போல் அவுரங்கசீப்பை நான் கொடுங்கோலர் எனக் கருத மாட்டேன். சமீபத்திய ஆட்சியாளர்களாலும், திரைப்படங்களாலும் அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கப்படுகிறது” எனக் கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அபு ஹாஸ்மி மார்ச் 26 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதிலும் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அவுரங்கசீப் சமாதியை அகற்ற முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேரனோட படிப்பு போச்சு.. தனுஷை மேடையில் கிழித்தெடுத்த தந்தை கஸ்தூரி ராஜா!
மேலும், இந்தப் பிரச்னையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அது மட்டுமல்லாமல், விஸ்வ இந்து பரிஷத் மாநிலச் செயலாளர் கிஷோர் சவான், பஜ்ரங் தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் ஆகியோர், அவுரங்கசீப் சமாதி அகற்றப்படவில்லை என்றால் அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவையில் இடித்தது போல் அவுரங்கசீப் சமாதியை அகற்றுவோம் என்று தெரிவித்தது கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் நாக்பூரில் கலவரம் மூண்டு தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.