செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தாரா? குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏக்கள்.. பேரவையில் நடந்தது என்ன?

Author: Hariharasudhan
24 March 2025, 2:02 pm

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து எதிர்கட்சித் தலைவர் திமுக சிவா உள்பட திமுகவினர் வெளியேற்றப்பட்ட பின்னணி குறித்து பார்க்கலாம்.

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, லஞ்சம் பெற்ற வழக்கில், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் சிபிஐயால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று (மார்ச்.24) எதிரொலித்தது. கூட்டம் தொடங்கியதும், நடைபெற்ற கேள்வி நேரத்தில், எதிர்கட்சித் தலைவரும், திமுக எம்எல்ஏவுமான சிவா, சிபிஐயால் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கைது என்பது புதுச்சேரிக்கு மிகப்பெரிய தலைகுனிவு எனக் கூறினார்

எனவே, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, அவசர பிரச்னையாக இதனை எடுத்துப் பேச வேண்டும் என அவர் கோரினார். ஆனால், அவ்வாறு சட்டத்தில் இடமில்லை என்பதால், கேள்வி நேரத்துக்குப் பிறகு இது பற்றி முதல்வர் அல்லது பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிப்பார்கள் என சபாநாயகர் செல்வம் பதிலளித்தார்.

Puducherry DMK Walkout

இதனையடுத்து, திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கோஷமிட்டதுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, அனைவரையும் குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிடவே, சபைக் காவலர்கள் எதிர்கட்சித் தலைவர் சிவாவை குண்டுக்கட்டாக வெளியே தூக்கி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் இதனிடையே சட்டப்பேரவைக்கு தாமதமாக வந்த காரைக்கால் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம் மற்றும் நாக தியாகராஜன் ஆகியோர் அவைக்கு வந்து, வெளியேற்றியவர்களை மீண்டும் அவைக்குள் அழையுங்கள், அவர்கள் முக்கியப் பிரச்சினையை தான் பேசியுள்ளார் என்றனர்.

இதையும் படிங்க: உள்ள யாரு.. வெளிய நானு.. பார்ட் டைம் போலீஸ் சிக்கி சிறை சென்றது எதற்காக? பகீர் பின்னணி!

அதற்கு சபாநாயகர் செல்வம், “இது சிபிஐ விவகாரம். மத்திய அரசு அதற்கு பதில் கூறும். சட்டமன்றம் அதற்கு பதிலளிக்கும் இடத்தில் இல்லை” எனக் கூறினார். மேலும் அமைச்சர் பதவி விலகக் கூற வேண்டிய அவசியமில்லை என ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கோஷமிட அவையில் குழப்பம் நிலவியது.

அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “கேள்வி நேரத்துக்குப் பிறகு விவாதிக்கலாம்” எனக் கூறினார் . மேலும், “தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தாரா? சபாநாயகர் கூறிய பிறகு அவைக்கு நடுவில் நாடகம் தேவையில்லை” எனக் கூறினார். இதனையடுத்து, தாமதமாக வந்த இரண்டு திமுக எம்எல்ஏக்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

  • Nayanthara to walk out of Mookuthi Amman 2 மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா விலகல்? பதறிய குஷ்பு!
  • Leave a Reply