நிமிடத்திற்கு நிமிடம் மாற்றிய ஆளுநர்.. பரபரப்பில் ஆளுநர் மாளிகை.. என்னதான் பிரச்னை?
Author: Hariharasudhan6 January 2025, 11:26 am
தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்த வெளியேறிய நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று (ஜன.06) சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். அப்போது, தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் 3 நிமிடங்களிலேயே புறப்பட்டார்.
இதனையடுத்த சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகை ஆங்கிலத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. அதில், “தமிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். மாண்புமிகு ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் நாடாளுமன்றத்தில் தேசிய கீதமானது பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது.
இதேபோல் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் மாளிகைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார் ஆளுநர்.
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக அதனை மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் அவர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பின்னர், அடுத்த சில நிமிடங்களில் இந்த பதிவு நீக்கப்பட்டது. இதனையடுத்து, வெளியிடப்பட்ட புதிய பதிவில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.
இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: தேசிய கீதம் அவமதிப்பு? 3 நிமிடங்களில் புறப்பட்ட ஆளுநர்.. ஆண்டின் முதல் பேரவை புறக்கணிப்பு!
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், “மாண்புமிகு ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் நாடாளுமன்றத்தில் தேசிய கீதமானது பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது” என்ற வரி மட்டும் புதிய பதிவில் நீக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, தேசிய கீதம் பாடிக் கொண்டிருந்தபோதே ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.