LIC Website in Hindi; எதிர்ப்பும்.. காரணமும்!

Author: Hariharasudhan
19 November 2024, 3:35 pm

எல்ஐசி இணையதளம் இந்தி மொழியில் மாறியது இன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.

கோயம்புத்தூர்: கடந்த மாதம் வரை ஆங்கில மொழியில் இருந்த LIC எனப்படும் இந்திய இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வலைத்தளம், இந்த மாதம் முதலே முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், மாற்று மொழிகளாக ஆங்கிலமும் மற்றும் மராத்தியும் மட்டுமே தரப்பட்டிருக்கிறது. அதேநேரம், ஆங்கிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றாலும், भाषा (மொழி என பொருள்படும் இந்தி சொல்) என்பதைத்தான் அழுத்த வேண்டும்.

ஆங்கில மொழிக்கு மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களா என ஒரு PoP UP நோட்டிஃபிகேஷன் வருகிறது. ஆனால், அதுவும் இந்தியில்தான் வருகிறது. ஆங்கில மொழியில் மாற்ற வேண்டுமா என்பதற்கு இந்தியிலும், இந்தி மொழியில் மாற்ற வேண்டுமா என்பதற்கு ஆங்கிலத்திலும் POP UP தந்திருக்கிறார்கள். இது எல்ஐசி முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “எல்ஐசி இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சாரக் கருவியாக மாற்றப்பட்டு விட்டது. ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது,இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழித் திணிப்பு தவிர வேறு ஒன்றும் இல்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்த ஒன்று. எனவே, இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்” எனத் தெரிவித்து உள்ளார்.

அதேபோல், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.

Mk Stalin and eps

மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: சீமானின் ஆவேசப் பேச்சு தம்பிகளிடம் எடுபடவில்லையா? அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!

இவ்வாறு இருக்க, எல்ஐசி தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “இந்தியில் இணையதள முகப்பு பக்கம் உள்ளதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம். தற்போது அந்தக் கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!