திருப்பதி கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுவா? ஆட்சியர் முக்கிய தகவல்!
Author: Hariharasudhan9 January 2025, 9:55 am
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் பக்தர்களும் உயிரிழந்தனர்.
திருப்பதி: உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் நாளை திறக்கப்பட உள்ளது. இதற்காக நாளை முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாகச் சென்று ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்காக சர்வ தரிசன டோக்கன்கள், நேற்று அதிகாலை முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, விஷ்ணு நிவாசம் உள்பட 8 இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. இதன்படி, இலவச டோக்கன் பெற நேற்று மதியம் முதலே சுமார் ஒரு லட்சம் பேர் குவியத் தொடங்கினர்.
முக்கியமாக, திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பைராகி பட்டிடையில் அமைக்கப்பட்ட கவுன்டரில், பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்களும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் திணறினர்.
மேலும், ஒருவரை ஒருவர் முந்திச் செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது. எனவே, அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றனர். இதில், சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த மல்லிகா, கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த நிர்மலா உள்பட ஆந்திராவைச் சேர்ந்த ரஜினி, சாந்தி, ராஜேஸ்வரி மற்றும் நாயுடு பாபு ஆகியோரும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: ”உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ..” சீமான் சர்ச்சை பேச்சு.. வெடித்த அரசியல் பூகம்பம்!
இதன் முதற்கட்ட விசாரணையில், பிரதான நுழைவு வாயிலை திடீரென திறந்து விட்டதால் பக்தர்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே சென்றதே விபத்துக்கான காரணம் என திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்வர் கூறியுள்ளார். அது மட்டுமின்றி, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கேட்டைத் திறந்து விட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.