இன்னும் மீளா துயரத்தில் விழுப்புரம்.. வீதிக்கு வந்த மக்கள்.. அரசுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு!
Author: Hariharasudhan4 December 2024, 5:27 pm
விழுப்புரத்தில் பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம்: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத வகையில் விழுப்புரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, விக்கிரவாண்டி, திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம், மயிலம், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர், திருக்கோவிலூர், முகையூர், மணம்பூண்டி, கெடார், காணை, செஞ்சி மற்றும் மேல்மலையனூர் ஆகிய பகுதிகள் அதிக அளவில் சேதத்தைச் சந்தித்து உள்ளன.
இதனால் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்து, மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மேலும் பல குடியிருப்புகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால், அங்குள்ள மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். அது மட்டுமின்றி, பல நிவாரண மையங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் சில இடங்களில் உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மேலும், விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகள், விரிவாக்கப் பகுதிகள் மற்றும் திண்டிவனம் போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வெள்ள நீர் வடியாமலே இருக்கிறது.
அது மட்டுமின்றி, விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகம் உள்பட மாவட்டத்தில் 240 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளதாக மாவட்ட நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதேபோல், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 782 ஏரிகளில், 48 ஏரிகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
இதையும் படிங்க: பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா அதிரடி கைது… கோவையில் பரபரப்பு!
மேலும் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 505 ஏரிகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இவற்றில் 103 ஏரிகளில் உடைப்பும் ஏற்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி, திருப்பாச்சனூர், மேட்டுப்பாளையம், பில்லூர், காணை, மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் 150 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, விரைவான மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த நிலையில், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள், முகாம்களாக மாற்றப்பட்டு, வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக திமுக அரசு முகாமிலிருந்து வெளியேற்றி வருவதாக செய்திகள் வருகின்றது.
ஏற்கனவே புயலின் தாக்கத்தால் மனதைப் பிழியும் சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த விடியா திமுக அரசு. வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த விடியா திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ,மறக்கவோ மாட்டார்கள்.
பேரிடர் காலங்களில் மக்களுக்கான உரிய குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இயல்புநிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளையும் தடையின்றி கிடைத்திட உறுதி செய்யுமாறு மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.