20ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் பயணம்.. கருப்புக்கொடி காட்டப்படும் என வேலூர் பாஜக அறிவிப்பு

Author: Babu Lakshmanan
4 June 2022, 8:54 am

வேலூர் : தமிழக முதல்வர் வேலூர் வரும் போது பாஜக சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என்று பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கார்த்தியாயினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவு பெற்று ஒன்பதாம் ஆண்டு துவங்குகிறது. நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய வாக்குறுதிகளை ஒரு சதவிகிதம் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

மதுவினால் அதிக விதவைகள் உள்ள மாநிலம் என கனிமொழி பேசினார். இப்போது அது குறைந்துவிட்டதா என்ன..? மதுக்கடைகளையும் மூடவில்லை. தமிழகத்தில் உள்ள திமுக அரசு எப்போதும் மத்திய அரசுடன் மோதல் போக்கை தான் கடைபிடித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து, தமிழக முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அளித்து வருகிறது.

தமிழக முதல்வர் இடங்களை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் விளைநிலங்களில் சிவப்பு கம்பளம் போட்டு சென்று ஆய்வு செய்கிறார். இதுதான் திராவிட மாடலா..?

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.300 கோடியை அதிமுக மற்றும் திமுக அரசுகள் மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்தாதால், அந்த தொகை மத்திய அரசிடம் சென்றுவிட்டது. இதனால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால், பணிகள் நடக்கவில்லை. இதற்கு அதிகாரிகளும் காரணம் தான்.

வேலூரில் விவசாயிகளுடன் கலந்துரையாடி காணொளி கூட்டத்தில் பிரதமர் பேசும் போது, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சத்தத்தை மியூட் செய்துவிட்டு, பிரதமர் உரையை புறக்கணித்தார். இதனை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தியுள்ளோம். புதிய பேருந்து நிலையத்தை திறக்க வரும் 20ம் தேதி வேலூர் வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு எங்கள் எதிர்ப்பை காட்ட, பாஜக சார்பில் கருப்பு கொடியை காட்டுவோம்.

புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் நியாயமான முறையில் டெண்டர் விட்டுதான் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் அதிகமாக உள்ளது. இதனால், விதவைகள் அதிகமாக உள்ளனர். கனிமொழி எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், இப்போது ஒரு பேச்சை பேசுகிறார்.

மாணவர் சமுதாயம் தற்போது தரம் தாழ்ந்து செல்கிறது. எனவே, தமிழக அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்ததில் ஒரு சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை. பெண்களுக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை. தமிழக அரசு அரசியல் சுயலாபத்திற்காக தான் செயல்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி தங்களின் திட்டம் என ஏமாற்றுகிறார்கள்.

தமிழகத்தில் காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை. அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை இட வேண்டும், என்று கூறினார் பேட்டியின் போது நிர்வாகிகள் மாவட்டத்தலைவர் மனோகரன், பொதுசெயலாளர் ஜெகன், பாபு, சரவணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu