Fengal Cyclone எப்போது உருவாகும்? எங்கு கரையைக் கடக்கும்? வெளியான முக்கிய தகவல்!

Author: Hariharasudhan
26 November 2024, 5:11 pm

ஃபெங்கல் புயல் (Fengal Cyclone) எப்போது கரையைக் கடக்கும் என இன்னும் கணிக்கப்படவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் வடக்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழையும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பரவலான மழையும் பெய்து வருகிறது.

அதேநேரம், விருதுநகர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் சாரல் முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (நவ.26) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “வங்கக் கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.27) புயலாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக, இன்று (நவ.26) மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும்.

அதேபோல், நாளை கடலூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவாரூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து, நாளை மறுநாள் (நவ.28) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிககன மழை பெய்யும்.

மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாது, நவம்பர் 29ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை பொழிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க: போக்சோ குற்றவாளிக்கு சூப்பர் தண்டனை.. இனி தப்பு பண்ணவே பயம் வரணும்!

மேலும், வருகிற 30ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று கூறினார்.

மேலும், நாளை உருவாக உள்ள ஃபெங்கல் (Fengal) புயலானது, எப்போது கரையைக் கடக்கும் என்று இன்னும் கணிக்கப்படவில்லை எனக் கூறிய பாலச்சந்திரன், புயலாக வலுப்பெற்று தமிழ்நாடு, இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவித்தார்.

  • Divya Bharathi latest photoshoot கவர்ச்சியில் மின்னும் நடிகை திவ்ய பாரதி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 159

    0

    0