யார் இந்த அனிதா ஆனந்த்? கனடா புதிய பிரதமர் ரேஸில் தமிழக வம்சாவளி!
Author: Hariharasudhan7 January 2025, 9:54 am
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் ரேஸில் 8 பேர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒட்டாவா: நடப்பாண்டு, கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மற்றும் தான் சார்ந்த லிபரல் கட்சியின் தலைவர் பதவியை ஜஸ்டீன் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். இதனை, கனடா மக்களின் நலனுக்காகவும், ஜனநாயகத்தின் மாண்புக்காகவும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மார்ச் 24ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அந்நாட்டின் கவர்னர் ஜெனரலுக்கு ட்ரூடோ வலியுறுத்தி உள்ளார். இதனிடையே, கனடாவின் அடுத்த பிரதமர் யார் என தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த அடுத்த பிரதமர் ரேஸில் மொத்தம் 8 பேர் உள்ள நிலையில், அதில் 2 பேர் இந்திய வம்சாவெளியினர் ஆவர்.
யார் இந்த அனிதா ஆனந்த்? இதில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆன்ந்துக்கு பிரதமர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் தற்போது, போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வரத்தக அமைச்சராக பதவி வகிக்கிறார். மேலும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் அனிதா இருந்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு அரசியலுக்குள் வந்ததில் இருந்து, கட்சியின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக அனிதா ஆனந்த் இருந்து வருகிறார். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வுகளில் கலை பட்டம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டவியல், டல்ஹௌசி பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டம், மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
மேலும், இவர் நோவா ஸ்கோஷியாவின் கென்ட்வில்லில் பிறந்தார். அவரது தாயார் சரோஜ் டி.ராம் மற்றும் தந்தை எஸ்.வி.ஆனந்த் ஆகிய இருவரும் மருத்துவர்கள் ஆவர். மேலும், இவருக்கு கீதா மற்றும் சோனியா அனந்த் என இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.