யார் அந்த சார்? மாணவியின் திடுக் பதில்.. திருப்பூர் பக்கம் திரும்பிய விசாரணை!
Author: Hariharasudhan4 January 2025, 2:18 pm
அண்ணா பல்கலை வன்கொடுமை விவகாரத்தில் சார் என ஞானசேகரன் 3 முறை கூறியதாக மாணவி விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: யார் அந்த சார்? யார் அந்த சார்? என்பதே தற்போது வரை தமிழக எதிர்கட்சிகள் எழுப்பு வரும் கேள்வி. இந்த நிலையில், அந்த சார் யார் என்பதை அம்மாணவியே உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவில் மாணவி விசாரணையில் கூறிய தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளது.
ஏனென்றால், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், வேறொரு சாரிடம் தன்னை நெருக்கமாக இருக்கச் சொன்னதாகவும், நான் மிரட்டிவிட்டு வந்துவிடுவேன் என அவன் அவரிடம் கூறியதாகவும், மொத்தம் 3 முறை சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியதாகவும் மாணவி SIT எனப்படும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும், போலீசார் அளித்த தகவலின்படி, அவரது செல்போன் ஃப்ளைட் மோடில் போடப்பட்டிருந்ததாக கூறியிருந்தனர். ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சியின்படி, அவரது மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது, அதனை அவர் எடுத்து பேசுவது போன்று உள்ளதாக இருக்கிறது என்ற தகவலில் வெளியாகி திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அது மட்டுமல்லாமல், வேறு ஏதேனும் சிம் கார்டு அல்லது மொபைல் போனை ஞானசேகரன் வைத்திருந்தாரா என்ற கேள்விக்கான விடையையும் தேடி வரும் சிறப்பு விசாரணைக்குழு, இந்தச் சம்பவத்தில், பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரும், ஞானசேகரனின் கூட்டாளியான திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்புடையதாக தகவல் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: சிசிடிவி காட்சி வேண்டும்.. நிதியுதவியை உதறிய உறவினர்கள்.. விக்கிரவாண்டி குழந்தை பலியான விவகாரத்தில் பரபரப்பு!
எனவே, அண்ணா பல்கலை விவகாரம் தீவிரம் அடைந்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவும் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறது.