வெங்காயத்தால் ஆட்சியை இழந்த பாஜக.. மதுவால் மீண்டும் டெல்லியை சாத்தியமாக்கியது எப்படி?
Author: Hariharasudhan8 February 2025, 11:44 am
27 ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயத்தால் ஆட்சியை இழந்த பாஜக, மீண்டும் டெல்லியில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்கிறது.
டெல்லி: 27 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் தலைநகரை தனதாக்கியது டெல்லி என்ற பேச்சுதான் இன்று ஊர் முழுக்க… ஊடகங்கள் முழுக்க.. ஆனால், 27 வருடங்களாக பாஜகவை டெல்லி மக்கள் கைவிட்டது எப்படி, ஏன் என்ற கேள்வியும் உங்களுக்குள் எழலாம். அதற்கு ஒரே பதில் ‘வெங்காயம்’ மட்டும் தான்.
ஆம், இன்று கிலோ 50 ரூபாய் வெங்காயம் என்றாலே பக்கென்று இருக்கும். ஆனால், 1998இல் வெங்காயம் கிலோ 50 ரூபாய் என்றால், அன்றைய பணவீக்க நிலையை எண்ணிப் பாருங்கள். இதுதான், 27 வருடங்களுக்கு முன்னர் டெல்லியில் பாஜக ஆட்சியை இழக்க காரணம்.
இன்னும் சொல்லப்போனால், 1993 முதல் 1998 வரை டெல்லியில் ஆட்சியில் இருந்த பாஜகவினர் மீது சில ஊழல் புகார்களும் இருந்தது. ஆனால், வெங்காயத்தால் உருவான பொருளாதாரச் சூழலே இதனை டெல்லியின் கடைக்கோடி மக்கள் மீதும் திணித்தது எனலாம்.
குறிப்பாக, 1997ஆம் ஆண்டு இறுதியில் வெங்காயம் கிலோ 9 முதல் 12 ரூபாய் வரை விற்ற நிலையில், 1998ஆம் ஆண்டு பருவம் தவறிய மழையால் உண்டான விவசாய பாதிப்பால், அந்த ஆண்டு ஜனவரியில் 20 முதல் 25 ரூபாய் வரை கிலோ வெங்காயம் சென்றது. இதனால் ஏற்றுமதிக்கு தடையும் விதிக்கப்பட்டது.
பின்னர், மீண்டும் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும், ஆகஸ்ட் மாதத்தில் 28 ரூபாய் வரை ஒரு கிலோ வெங்காயம் சென்றது. இவ்வாறான விலைவாசி உயர்வால் பாஜக ஆட்சி ஆட்டம் கண்டது. இதனால், அடுத்ததாக பாஜக ஆட்சியை இழந்து, காங்கிரஸிடம் கொடுத்தது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடிப்பது எப்படி? இந்த நிலையில், அடுத்து காங்கிரஸ், பின்னர் ஆம் ஆத்மி என ஆட்சி அமைத்த நிலையில், மீண்டும் தேசியக் கட்சியான பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனிடையே, ஆம் ஆத்மி கட்சி மீது புதிய கலால் கொள்கை எனப்படும் மதுபானக் கொள்கை ஊழல் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உடன் சத்குரு சந்திப்பு!
காங்கிரஸூக்கு காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல் ஆகியவை இடத்தை இழக்க வைத்ததோ, அதேபோல் மதுபானக் கொள்கை ஊழல் ஆம் ஆத்மிக்கு ஆட்சியை கைவிட வைத்துள்ளது. மேலும், ஊழலற்ற அரசு அமைய என்ற பிரசாரத்தை முன்னெடுத்த ஆம் ஆத்மிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரம், கடந்த மூன்று மக்களவைத் தேர்தலை டெல்லி சந்தித்துள்ளது. அதில் பாஜகவே ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், 2014 முதல் பிரதமராக உள்ளா நரேந்திர மோடியின் முகம், ‘என் தலைவன் முகம் தான் பிராண்ட்’ என்ற வசனத்துக்கு ஏற்ப டெல்லியில் பாஜகவின் முகத்திற்கு ஏற்ப மாறிவிட்டதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.