45 நிமிடம் இதைச் செய்தால் போதும்.. நாமக்கல் நரசிம்மர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
Author: Hariharasudhan17 December 2024, 3:14 pm
நாமக்கல் நரசிம்மர் கோயிலில் 45 நிமிடம் அமர்ந்து குறிப்பிட்ட சொல்லைச் சொன்னால் பணம் கொட்டும் என யூடியூப் ஜோதிடர் கூறியதை நம்பி திரளான பக்தர்கள் வந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
நாமக்கல்: நாமக்கல், கோட்டை பகுதியில் புகழ் பெற்ற நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த நிலையில், மார்கழி மாதம் முதல் நாளை ஒட்டி, நேற்று (டிச.16) அதிகாலை சாமி தரிசனம் செய்ய தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்த வண்ணம இருந்தனர்.
ஆனால், திடீரென நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே கூடத் தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து, சூரியன் உதயம் ஆன பின்பு, கோயில் வளாகம் முழுவதும் அமர்ந்து ஒரே இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தனர். பின்னர், இது குறித்து அவர்களிடம் கோயில் நிர்வாகத்தினர் காரணம் கேட்டபோது, யூடியூப் சேனல் ஒன்றில் ஜோதிடர் பிரகு.பிரபாகரன் என்பவர், மார்கழி முதல் நாளில், மீனம் ராசியில் ராகு, கன்னி ராசியில் கேது பகவான் சஞ்சாரம் செய்வதால், நாமக்கல் நரசிம்மர் கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாருக்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தால் சகல விதமான செல்வங்களும் கிடைக்கும் என்றும், பணம் கொட்டும் என்றும் கூறி இருக்கிறார். பின்னர் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், திடீரென நாமக்கல் நரசிம்மர் கோவிலில் அளவுக்கதிமான பக்தர்கள் குவிந்து உள்ளனர்.
இதையும் படிங்க: சாலையின் இருபுறமும் தலை நசுங்கிய சடலங்கள்.. நாமக்கல்லில் பரபரப்பு!
அது மட்டுமல்லாமல், அந்த ஜோதிடர் தலைமையில் பக்தர்கள் கோயில் வளாகத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து, காலை 6.35 மணி முதல் 7.25 மணி வரை ‘ஓம் ஸ்ரீ ஓம்’ என்ற சொல்லைக் கூறி கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளனர். மேலும், பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள், தங்களது வாகனத்தை சாலையின் இருபுறமும் நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கியமாக, இது குறித்து கோயில் நிர்வாகத்திற்கு தெரியவில்லை.