மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சேகர்பாபு செய்தியாளரை சந்தித்தது ஏன்? சென்னை வந்த CM ஸ்டாலின் பதில்!!
Author: Udayachandran RadhaKrishnan1 June 2023, 8:45 am
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்றிருந்தார்.
9 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த முக ஸ்டாலினுக்கு திமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது ஒரு செய்தியாளர், “புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது தமிழர்களுக்குப் பெருமைதானே?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “அது உண்மையில் சோழர் காலச் செங்கோலாக இருந்தால், அது தமிழ்நாட்டிற்கு பெருமைதான். ஆனால் சோழர் காலத்துக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வரலாற்று அறிஞர்களே சொல்லி இருக்கிறார்கள்.
செங்கோலை வாங்கிய அன்றே செங்கோல் வளைந்துவிட்டதே! அதற்கு உதாரணம் தான் இந்தியாவுக்கு புகழ் ஏற்படுத்திக் கொடுத்த மல்யுத்த வீராங்கனைகளை அடித்து உதைத்து கைது செய்த காட்சியை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதுவே சாட்சியாக அமைந்திருக்கிறது. அது தான் உண்மை.” என்றார்.
“செங்கோல் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், தமிழ்நாடு ஆளுநரும் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டது சரியா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதில் பதிலளித்த ஸ்டாலின், “மத்திய அரசின் சார்பிலான விழா குறித்த கலந்துரையாடல் என்று சொல்லித் தான் அழைத்தார்கள். அதனால் தான் எனக்கு தகவல் வந்தவுடன் அமைச்சர் சேகர் பாபு அவர்களை நானே கலந்து கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தேன்.
ஆனால் சென்றபிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். நிகழ்ச்சிக்கு போன அமைச்சர் சேகர் பாபு அவர்களே விளக்கமாக சொல்லி இருக்கிறார்.
குடியரசுத் தலைவர் அவர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும், அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று சேகர் பாபு அவர்கள் அதே இடத்தில் சொல்லி விட்டு வந்திருக்கிறார்.” என்று தெரிவித்தார்.