அண்ணா, கருணாநிதி பெயரை குறிப்பிட்ட சோனியா காந்தி, காமராஜர் பெயரை ஏன் கூறவில்லை? ஆளுநர் தமிழிசை கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan15 October 2023, 5:52 pm
அண்ணா, கருணாநிதி பெயரை குறிப்பிட்ட சோனியா காந்தி, காமராஜர் பெயரை ஏன் கூறவில்லை? தமிழிசை கேள்வி!!
தி.மு.க. சார்பில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டது அண்ணா மற்றும் கருணாநிதி தலைமையிலான அரசுகள் என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய சோனியாகாந்தி, பெண்கள் கல்வியில் முன்னேற அடித்தளமிட்டது அண்ணா மற்றும் கருணாநிதி அரசுகள் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பேச்சு மிகவும் துரதிருஷ்டவசமானது.
முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதிக்கு முன்பே தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார்.
தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் பள்ளிகளை திறந்தார்.கிராமப்புறங்களில் இருக்கும் குழந்தைகள் 3 கிலோ மீட்டருக்கு மேல் நடக்கக்கூடாது என்ற அடிப்படையில் இந்த பள்ளிகளை திறந்து பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பலமான அடித்தளத்தை அமைத்து இருந்தார்.
தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர், கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை சொல்லாதது ஏன்? அவரை மறந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
0
0