துணை முதல்வராக இருந்த போது கோடநாடு வழக்கில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை : நிருபர்கள் கேள்வியால் தடுமாறிய ஓபிஎஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan11 July 2023, 1:21 pm
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இன்று பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது ஓபிஎஸ் கூறியதாவது:- கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
கோடநாடு வழக்கு விசாரணை கிடப்பில் உள்ளது . கோடநாடு வழக்கில் உரிய விசாரணை தேவை. விரிவான விசரணை நடத்தினால்தான் குற்றவாளிகள் யார் என்று தெரியும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதையடுத்து செய்தியாளர்கள், நீங்கள் முந்தைய ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்தீர்களே, அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அவர், நானும் 4 வருடம் துணை முதலமைச்சராக இருந்தேன், துணை முதலமைச்சருக்கு அரசில் எவ்வித அதிகாரமும் இல்லை, நான் வகித்த துறையில் மட்டும்தான் எனக்கு அதிகாரம் இருந்தது.
சட்டம் ஒழுங்கு காவல்துறை போன்றவற்றில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. முழுமையான பொறுப்பு தமிழ்நாட்டில் முதலமைச்சராக யாரெல்லாம் இருந்தார்களோ அவர்களுக்குத்தான் உண்டு.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த போது வலியுறுத்த வேண்டியவர்களை வலியுறுத்தினோம், அதிமுக, இரட்டை இலை விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்ததும் மேல் நடவடிக்கை தொடரும்.
திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், கோடநாடு வழக்கு தீவிர புலன் விசாரணை செய்து மக்களுக்கு தெரியப்படுத்வோம் என கூறியிருந்தனர்.
ஆனால் இந்த வழக்கில் சிறு அளவில் கூட முன்னேற்றம் இல்லையே, அரசின் பணியை துரிதப்படுத்தத்தான் இந்த ஆர்ப்பாட்டமே நடத்த போகிறோம் என கூறினார்.