கன்னடம் – மராத்தி மோதல்.. கர்நாடகாவில் வெடித்த பூகம்பம்.. என்ன நடந்தது?

Author: Hariharasudhan
24 February 2025, 2:26 pm

கர்நாடக பெல்காவி மாவட்டத்தில் உண்டான மோதலையடுத்து, கன்னடம் – மராத்தி மொழி மோதல் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பெல்காம் எனப்படும், பெல்காவி மாவட்டத்தில் உள்ள பாலன்குந்திரி என்ற கிராமத்தில், கர்நாடகா அரசுப் போக்குவரத்து பேருந்தில் சிறுமி ஒருவர் நடத்துநரிடம் மராத்தியில் டிக்கெட் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு, டிக்கெட்டை கன்னடத்தில் கேட்கும்படி நடத்துநர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சில பயணிகளும் மராத்தியில் டிக்கெட் கேட்டதால், அவர்களிடமும் டிக்கெட்டை கன்னடத்தில் கேட்கும்படி நடத்துநர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தி,ல் நடத்துநரை பயணிகள் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவின் சித்ரதுர்கா என்ற இடத்தில், மகாராஷ்டிரா அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துனரின் முகத்தில், கன்னட அமைப்புகள் கரியைப் பூசினர்.

இதற்கு எதிர்வினையாக, புனேயில் கர்நாடகா அரசுப் பேருந்துகள் மீது சிவசேனா தொண்டர்கள் மையைத் தெளித்தனர். மேலும், கோலாப்பூரில் கர்நாடகா அரசுப் பேருந்துகளில் காவி கொடியையும் ஏற்றினர். இதனால், இரு மாநிலங்கள் இடையே இரு மாநில போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Kannada Vs Marathi

கர்நாடகாவில் என்ன பிரச்னை? மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் இருக்கும் பெல்காம் உள்பட சில பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிர அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்தப் பிரச்னைக்காக இரு மாநிலங்களும் பல முறை மோதலிலும் ஈடுபட்டுள்ளன.

மேலும், இதனால் பெல்காமில் கர்நாடகா அரசு தற்போதுப் சட்டமன்றக் கூட்டத்தையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான், மீண்டும் இரு மாநிலங்கள் இடையே மொழிப் பிரச்னை உருவாகி உள்ளது. இந்த நிலையில், இது குறித்து மகாராஷ்டிரா போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் கூறுகையில், “ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கர்நாடகாவிற்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் நிலைமை சீராகும் வரை ரத்து செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. 2026ல் வெற்றி கூட்டணி – இபிஎஸ் சூளுரை!

மகாராஷ்டிரா அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஊழியர்கள் ஏன் தாக்கப்பட்டனர் என்பதற்கு கர்நாடக அரசு விளக்கமளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரம், இது குறித்து கர்நாடக பாஜக தலைவர் விஜேந்திரா கூறுகையில், “கர்நாடகாவில் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு கன்னடத்திற்கு எதிராகவும், கர்நாடகாவிற்கு எதிராகவும் பேசுவதை மன்னிக்க முடியாது” என்றார்.

மேலும், இது குறித்து சிவசேனா (உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ராவுத், “இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இரு மாநில முதலமைச்சர்களை மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

  • Vidaamuyarchi OTT release date ஒரு மாதத்திற்குள் OTT-க்கு தாவும் விடாமுயற்சி…தேதி குறிச்சாச்சு..!
  • Leave a Reply