களத்திற்குச் செல்லாமல் அளித்த உதவியால் சர்ச்சையில் விஜய்.. நேரில் அழைத்தது ஏன்?

Author: Hariharasudhan
3 December 2024, 5:41 pm

புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து நிவாரணம் வழங்கியது சர்ச்சையான நிலையில், இது குறித்தான விளக்கம் வெளியாகி உள்ளது.

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இன்று (டிச.03) சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் வைத்து, ஃபெஞ்சல் புயலால் டி.பி.சத்திரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து ஒருவர் என மொத்தம் 250க்கும் மேற்பட்டோருக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதற்காக பாதிக்கப்பட்டவர்கள் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள் மூலம் டி.பி.சத்திரத்தில் இருந்து பனையூர் அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை களத்தில் சந்திக்காமல், அவர்களை தன்னுடைய இடத்திற்கு வரவழைத்து விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கியது சர்ச்சையானது.

TVK Vijay to cyclone affected people

இந்த நிலையில், “நான் உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இவ்வாறு அமர்ந்து பேச முடியாது. அதேநேரம் அங்கு நான் வந்தால் நெரிசல் ஏற்படும். அப்போது உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது. நேரம் செலவிட முடியாது.

எனவே, நான் நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என நிவாரணம் பெற்றவர்களிடம் விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்ற விஜய், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருந்தார்.

இதையும் படிங்க: ’கார்ல இருந்து இறங்க மாட்டீங்களா’.. திமுக ஞாபகம் வைக்க இதுபோதும்.. அண்ணாமலை கடும் தாக்கு!

மேலும், “திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

TVK Vijay on cyclone affected people

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் தவெக தலைவர் விஜய் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 149

    0

    0