‘கடலூரில் கொஞ்சம் பாதிப்பு”.. சாத்தனூர் அணை ஏன் திறக்கப்பட்டது? அன்புமணி கேள்வியும், அமைச்சரின் பதிலும்!
Author: Hariharasudhan3 December 2024, 11:55 am
சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கூடுதல் நீரால் கடலூரில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கடலூர்: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் வட தமிழக மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து உள்ளது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
அது மட்டுமல்லாமல், விவசாய நிலங்களும் பாதிப்பைச் சந்தித்து இருக்கின்றன. முக்கியமாக, செம்மண்டலம் குறிஞ்சி நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை போலீசாரின் மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் மீட்டனர்.
அதேபோல், பண்ருட்டி பகண்டை தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை மாநில பேரிடர் மீட்புப் படையினர் கயிறு மூலம் பாதுகாப்பாக மீட்டனர். இந்த நிலையில், சாத்தனூர் அணையில் திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை அதிகாலை 2 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் கடலூர் நகரத்தில் 90 சதவீத வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
உயிர்ச்சேதம் பற்றி இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. தென்பெண்ணை ஆற்றுப்படுகை ஓரங்களில் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம், மக்களுக்கு முன்கூட்டியே முறையாக அறிவிக்கப்படாததுதான்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “திடீரென மழை கொட்டித் தீர்த்ததால் சாத்தனூர் அணையின் கொள்ளளவைத் தாண்டி நீர் வந்துவிட்டது. எனவே அணையில் இருந்து கூடுதல் நீரை திறந்து விட்டுள்ளனர். இப்போது அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுவிட்டது.
இதையும் படிங்க: துண்டான உடல் பாகங்கள்.. பதற வைத்த ஃபெஞ்சலின் கோர முகம்.. இருவரை மீட்பது எப்போது?
இருப்பினும், திறந்து விடப்பட்ட கூடுதல் நீரால் இங்கு கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது எங்கு எல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கத் தேவையான இடங்களில் மதில் சுவர் கட்டப்படும்” எனக் கூறினார்.