மதுபோதையில் தகராறு செய்த கணவன்… கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்ற கோபக்கார மனைவி…!!
Author: Babu Lakshmanan5 July 2022, 6:18 pm
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை அறிவாளால் வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன்(53) கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுதா(38) என்ற மனைவியும் பாலமுருகன் மற்றும் ராஜராஜ சோழன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இதனிடையே, மகாதேவன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டில் பணம் வாங்கி மது அருந்தி வந்துள்ளார்.
இதனால் இவருக்கும் இவரது மனைவி அமுதாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மகாதேவன் குடித்துவிட்டு மனைவி அமுதாவிடம் சண்டையிட்டு வலது கையை உடைத்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மதியம் குடிப்பதற்கு 500 ரூபாய் பணம் வாங்கிவிட்டு மகாதேவன் சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பிய போது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரது மகன் ராஜராஜ சோழன் தந்தையை தட்டி கேட்க, அவர் பாட்டிலை உடைத்து தனது மகன் கை மற்றும் வயிற்றுப் பகுதியில் தாக்கி கிறி உள்ளார்.
இதனை கண்டு ஆத்திரம் அடைந்த மனைவி அமுதா மகாதேவனிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது அரிவாளைக் கொண்டு மகாதேவன் அமுதாவை வெட்ட முயன்ற போது, அறிவாளை பிடிங்கி ஆக்ரோஷமாக தனது கணவனை அமுதா வெட்டியுள்ளார். இதில் மகாதேவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
பின்னர் தனது மகன்களுடன் அமுதா மணல்மேடு காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மகாதேவனின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி அமுதாவை கைது செய்துள்ளனர்.
படுகாயமடைந்த மகன் ராஜராஜ சோழனுக்கு மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மது போதையில் தகராறு செய்த கணவனை மனைவியே அறிவாளால் வெட்டி கொன்றச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.