ரெண்டு பேருக்கு நடுவுல என்ன சாக்கு மூட்டை? மனைவியின் மறக்க முடியாத பரிசு!
Author: Hariharasudhan22 March 2025, 1:52 pm
ராஜஸ்தானில், கள்ளக்காதலைப் பார்த்த கணவரை அடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சுற்றுவட்ட சாலை பகுதியில், பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனைத் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், உயிரிழந்தது காய்கறி வியாபாரியான தனலால் சைனி என்பது தெரிய வந்துள்ளது. எனவே, அவரது மனைவி கோபாலி தேவி என்பவரைப் பிடித்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, தீனதயாள் என்பவருடன், கடந்த ஐந்து ஆண்டுகளாக கோபாலி தேவி முறை தவறிய உறவில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த சைனி, தனது மனைவியைக் கண்டித்துள்ளார்.
இருப்பினும், அதை பொருட்படுத்தாத கோபாலி தேவி, தனது ரகசியக் காதலனைச் சந்திப்பதை நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர்கள் இருவரும் கடையில் ஒன்றாக இருப்பதைப் பார்த்ததும் தனலால் சைனி கடும் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கோபாலி தேவி மற்றும் தீனதயாள் ஒன்று சேர்ந்து, சைனியின் தலையில் இரும்பு ராடால் பலமாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, மயக்க நிலையில் இருந்தவரை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கோபாலி தேவி, தீனதயாள் இருவரும் சேர்ந்து சைனியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று சாலையில் வீசியுள்ளனர். இவை அங்கு இருந்த சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யார் அங்கே.. எட்டிப் பார்த்த கணவனை கொன்ற மனைவி.. என்ன நடந்தது?
மேலும், உடலை ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள சுற்றுவட்ட சாலை பகுதி அருகே எரித்ததாக கோபாலி தேவி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, கோபாலி தேவி மற்றும் தீனதயாளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.