’என்ன சொல்லிட்டு நீ பண்றியா?’ செல்போனால் கத்திக்குத்து வரை சென்ற மனைவி!
Author: Hariharasudhan1 January 2025, 12:42 pm
தேனியில், செல்போனில் மறைந்து பேசிய கணவனை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் பகுதியில் தினகரன் (23) மற்றும் பிரியா (23) தம்பதி வசித்து வருகின்றனர். இதில், தினகரன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மேலும், பிரியா வீட்டு வேலைகளைக் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், மனைவி பிரியா, அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இதனைக் கவனித்த தினகரன், அதிக நேரம் செல்போனில் பேசக் கூடாது என்று கூறி, பிரியாவைக் கண்டித்து உள்ளார். இதனால் தினகரன் மீது பிரியா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தினகரன் வீட்டில் இருக்கும்போது, அவரது செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது தினகரன், வேகமாக செல்போனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே சென்று பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, இதனைப் பார்த்த பிரியா, ‘என்னை செல்போன் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு, நீ மட்டும் மறைமுகமாக வெளியே சென்று செல்போன் பேசலாமா?யாருடன் தனியாக செல்போன் பேசுகிறாய்?’ என்று கேட்டு கடும் கோபம் அடைந்து உள்ளார். அது மட்டுமல்லாமல், கணவரிடமிருந்த செல்போனையும் பறித்து கீழே வீசி உள்ளார்.
இதையும் படிங்க: ’சபாநாயகர் தனிச் செயலரின் மனைவி நான்’.. மிரட்டும் ஆசிரியை? இரட்டைமலை சீனிவாசன் பேத்தி பரபரப்பு புகார்!
இதனையடுத்து, கீழே கிடந்த செல்போனை தினகரன் எடுக்க முயன்று உள்ளார். அப்போது பிரியா, தான் கையில் வைத்திருந்த கத்தியால் தினகரனை சரமாரியாக குத்தி உள்ளார். இதில், அவரது கை மற்றும் நெஞ்சு பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி உள்ளது.
பின்னர், அவரை மீட்ட உறவினர்கள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நடந்த சம்பவம் குறித்து, தினகரன் போலீசில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு தினகரன் அளித்த புகாரின் பேரில், பிரியா மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.