பேரூராட்சி தலைவராக மனைவி, துணைத் தலைவராக கணவர் வெற்றி : கோவில்பட்டி அருகே நடந்த மறைமுக தேர்தலில் சுவாரஸ்யம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2022, 6:01 pm

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பேரூராட்சியில் தலைவராக மனைவியும், துணைத்தலைவராக அவரது கணவர் சுப்பிரமணியன் போட்டியின்றி ஒரு மனதாக வெற்றி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பேரூராட்சியில் உள்ள 15வார்டுகளுக்கு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 12, அதிமுக 2, சுயேட்சை -1 என வெற்றி பெற்றனர். பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி திமுக பேரூராட்சியை கைபற்றிய நிலையில் இன்று காலை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் 12வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அருணா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2வது முறை துணை தலைவராகவும், கடந்த 2016ல் பேரூராட்சியில் தலைவர் பதவினை ராஜினாமா செய்த காரணத்தினால் தலைவராகவும் பதவி வகித்துள்ள நிலையில் தற்பொழுது தலைவராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதையெடுத்து இன்று மதியம் துணைதலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 15வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்பிரமணியன் போட்டியின்றி ஒருமனதாக துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுப்பிரமணியனும் 2முறை பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருணாவும், துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுப்பிரமணியனும் கணவன், மனைவி என்பது குறிப்பிடதக்கது.

சுப்பிரமணியன் திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ளார். தம்பதியினர் வெற்றி பெற்றதை தொடர்ந்து பொது மக்கள், திமுக கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருவருக்கும் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்து தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தங்களது வெற்றி குறித்து துணைதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி மற்றும் மக்கள் திட்டங்கள் காரணமாக ஒட்டுமொத்த மக்களும் தங்களை வெற்றி பெற வைத்துள்ளார்கள்.

கழுகுமலை பேரூராட்சிக்கு தேவையான சாலைவசதி, குடிநீர், வாறுகால் வசதி, மின் விளக்கு வசதி அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சென்று அடையும் வகையில் தங்கள் பணி இருக்கும் என்றும், தலைவர், துணைதலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து மக்கள் பணிகளை செய்வோம் என்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி