மின்சாரம் தாக்கிய காட்டு யானை உயிரிழப்பு.. தர்மபுரியைத் தொடர்ந்து கோவையில் அதிர்ச்சி ; வனத்துறையினர் விரட்டும் போது நடந்த சோக சம்பவம்..!!
Author: Babu Lakshmanan25 March 2023, 11:55 am
கோவை : கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து யானைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. சம்பவ இடத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூச்சியூர் கிராமத்திற்குள் நள்ளிரவு ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, யானையை மணப் பகுதிக்குள் விரட்ட முயற்சித்த போது தனியார் நிலத்தில் இருந்த மின்கம்பத்தின் மேல் யானை மோதியதில், மின்கம்பம் உடைந்து மின்கம்பி யானையின் மீது விழுந்தாத தெரிகிறது. இதனால் யானையின் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்தது.
இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயேயும், விலங்கு நல ஆர்வலர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.