தேனியை அச்சுறுத்தும் அரிக்கொம்பன் … சாலையில் மக்களை ஓடஓட விரட்டும் காட்டு யானை ; வைரலாகும் வீடியோ..!
Author: Babu Lakshmanan27 May 2023, 1:55 pm
18 பேரை கொன்ற அரிக்கொம்பன் காட்டு யானை தேனி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உள்ள சின்னக்கல் பகுதியில் சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் எனப்படும் அரிக்கொம்பன் காட்டு யானை, பல உயிர்களை கொன்று குவித்தது.
இதையடுத்து, யானையை பிடித்து வேறு இடத்தில் கொண்டு சென்று விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், யானையை தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர், கடந்த ஏப்ரல் 30ம் தேதி 3 கும்கி யானைகள் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தி பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அரிக்கொம்பன் யானையை பிடித்தனர்.
இதையடுத்து, பிடிபட்ட அரிசிக் கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்ட நிலையில், தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கண்ணகி கோட்ட வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் அதனை விட்டனர்.
கடந்த சில தினங்களாக தேனி சின்னமனூர் அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் உலாவி வந்த அரிக்கொம்பன் யானை, தற்போது தேனி கம்பம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. அரிக்கொம்பன் தாக்கியதில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊருக்குள் புகுந்துள்ள காட்டு யானையை விரட்டும் பணியில் தமிழக வனத்துறையினர் களம் இறங்கியுள்ளனர்.
இதனிடையே, அரிக்கொம்பன் காட்டு யானை தேனி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.